கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிய மாணவிகள்;சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை மாணவிகள் தள்ளிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2023-08-25 18:45 GMT

நாகர்கோவில், 

கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை மாணவிகள் தள்ளிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஸ்சை தள்ளிய மாணவிகள்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலையில் மணக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக அமர்ந்திருந்தனர். அந்த பஸ் அண்ணா பஸ் நிலையத்தை விட்டு வெளியேறி கேப் ரோட்டில் பழைய தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.

டிரைவர் அந்த பஸ்சை இயக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே பஸ்சில் அமர்ந்திருந்த மாணவிகளுக்கு கல்லூரி தொடங்குவதற்கு முன்பு செல்ல வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிகள் பஸ்சை விட்டு இறங்கி, அதை தள்ளி இயங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதைப்பார்த்து அந்த வழியாக வந்த போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், ஒன்றிரண்டு ஆண்களும், மாணவிகளுடன் இணைந்து பஸ்சை தள்ளி விடும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது தூரம் பஸ்சை தள்ளியதும் மீண்டும் பஸ் ஸ்டார்ட் ஆனது. இதையடுத்து மாணவிகள் மீண்டும் பஸ்சில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றனர்.

பொதுவாக இதுபோன்று நடுவழியில் பஸ்சோ, லாரி போன்ற பிற வாகனங்களோ நின்றால் ஆண்கள் அந்த வாகனங்களை தள்ளிவிட்டு ஸ்டார்ட் ஆக டிரைவருக்கு உதவுவதை பார்த்திருப்போம். ஆனால் நேற்று முன்தினம் ஆண்களைப் போன்று கல்லூரி மாணவிகள் பஸ்சை தள்ளியது பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் மாணவிகள் பஸ்சை தள்ளிவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்க்கும் பலரும் பஸ்சின் நிலைபற்றி விமர்சனம் செய்தும், மாணவிகளின் துணிச்சல் பற்றி பாராட்டியும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்