பா.ம.க.வின் போராட்டம் கடுமையாக இருக்கும்

என்.எல்.சி. நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தினால் பா.ம.க.வின் போராட்டம் கடுமையாக இருக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2023-01-08 18:45 GMT

சேத்தியாத்தோப்பு, 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கா் விளைநிலத்தை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 2 நாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை நேற்று முன்தினம் நெய்வேலி அடுத்த வானதிராயபுரம் கிராமத்தில் தொடங்கினார். அப்போது 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் ஆதண்டார்கொல்லையில் முதல் நாள் பயணத்தை முடித்தார்.

2-வது நாளாக நடைபயணம்

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக அவர் சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவியில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர், கீழ்வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நடைபயணம் மேற்கொண்டதுடன், திறந்த வெளியில் பொதுமக்களிடம் பேசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியாக மும்முடிசோழகன் கிராமத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.

முன்னதாக கரிவெட்டி கிராமத்தில் நிருபர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விளை நிலங்களை பறிக்க துடிப்பது ஏன்?

தமிழக அரசின் கால்நடை கொள்கை ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி 2040-ம் ஆண்டிற்குள் ஜீரோ கார்பன் திட்டத்தினை கொள்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதன்படி புதிய அனல் மின் நிலையங்கள், நிலக்கரி எடுப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

இன்னும் 18 ஆண்டுகளில் ஜீரோ கார்பன் நிலையை எட்டுவோம் எனக் கூறியிருக்கும் நிலையில், இந்த விளை நிலங்களை பறித்து கொடுக்க அமைச்சர்கள் துடிப்பது ஏன்? மறுபுறம் மத்திய அரசும் 2070-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஜீரோ கார்பன் நிலைமையை எட்டுவோம் என அறிவித்திருக்கிறது.

ஏன் கைப்பற்ற வேண்டும்?

மாநில அளவிலும், மத்திய அளவிலும் ஜீரோ கார்பன் என்ற நிலையை எட்ட வேண்டும் என்ற கொள்கையை வைத்திருக்கும் நிலையில், 25 ஆயிரம் விளை நிலங்களை ஏன் கைப்பற்ற வேண்டும்?. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உலக அளவில் காலநிலை மாற்றம் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் கடுமையான வறட்சி தமிழகத்திலும் ஏற்படக்கூடும்.

கடுமையான போராட்டம்

மின் உற்பத்திக்கு புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. சமீபத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் இன்னும் 10, 15 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அப்போது என்.எல்.சி. போன்ற நிறுவனங்கள் தேவைப்படாது. இதுவரை எங்கள் கட்சி சார்பில் அமைதியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இனி என்.எல்.சி. நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்த முயன்றால் பா.ம.க. கடுமையான போராட்டங்களை நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்