இடிந்து விழும் நிலையில் ஓடை பாலம்
அங்குசெட்டிப்பாளையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஓடை பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே உள்ள அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில் திடீர்குப்பம் சாலையின் குறுக்கே ஓடும் ஓடையின் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கான்கிரீட் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. பாலம் உடைந்து போனால், திடீர்குப்பம்-அங்குசெட்டிப்பாளையம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும். இதனால் இதை சார்ந்துள்ள மாணவ , மாணவிகள் மற்றும் கிராமத்து மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு, பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.