பாழடைந்த நிலையில் இருக்கும் தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைத்து மக்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வலியுறுத்தல்

பாழடைந்த நிலையில் இருக்கும் தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைத்து மக்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வலியுறுத்தி உள்ளாா்.

Update: 2023-02-05 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள கோனூர் கிராமத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமைவாய்ந்த மரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில் புனரமைக்கப்படாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கோவிலை இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் மனோகர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோனூர் மரீஸ்வரர் கோவில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அறநிலையத்துறையின் கையில் போனதால் இதுபோன்ற கோவில்கள் எல்லாம் கவனிப்பாரற்று இருக்கிறது. தி.மு.க. அரசு கடவுள் நம்பிக்கை இல்லாத அரசா என்று தெரியவில்லை. எல்லா கோவில்களையும் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். கோனூர் மரீஸ்வரர் கோவில் பாழடைந்தவாறு உள்ள நிலையில் அறநிலையத்துறை கண்டும், காணாமல் இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்று பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்படாமல் இருக்கிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து கோவில்கள் இடிக்கப்படுகிறதே தவிர கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. புராதன சின்னங்களாக திகழும் இதுபோன்ற கோவில்களையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிற நிலையில் தமிழக அரசு, அதனை செய்யவில்லை. கோனூர் மரீஸ்வரர் கோவில் போன்று தமிழகத்தில் வழிபாடு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருக்கும் தொன்மைவாய்ந்த கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி மக்கள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் போராட்டங்களாக வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்