தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

நெய்வேலியில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-14 19:35 GMT

நெய்வேலி, 

நெய்வேலி வட்டம் 21 பூம்புகார் சாலை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பவுனாம்மாள் (வயது 60). வாழைப்பழம் வியாபாரி. இவர்களது மகன் தேவராஜ் (37). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. தங்கவேல் இறந்துவிட்டதால் பவுனாம்மாள் தனது மகன் தேவராஜூடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தேவராஜ் தனது தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறி மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ், தன்னை பெற்றெடுத்த தாய் என்றும் பாராமல் பவுனாம்மாளை சரிமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கைது

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவுனாம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். மது குடிக்க பணம் கொடுக்காததால் பெற்ற தாயை மகனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்