பணியின் போது திடீர் சாவு: குமரியை சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியின் போது ராணுவ வீரர் திடீரென இறந்தார். அவருடைய உடல் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
களியக்காவிளை,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியின் போது ராணுவ வீரர் திடீரென இறந்தார். அவருடைய உடல் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
ராணுவ வீரர் சாவு
பளுகலை அடுத்த தேவியோடு மாங்காலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருடைய மனைவி கீதா. இந்த தம்பதியின் மகன் அனூப்குமார் (வயது 38). இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், அஞ்சனா என்ற மகளும், ஆரோமல் என்ற மகனும் உள்ளனர்.
ராணுவ வீரரான அனூப்குமார் சுபைதராக உத்தரகாண்ட் மாநிலம் ஹல்துவானி என்னும் இடத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சொந்த ஊரில் அடக்கம்
அனூப்குமார் இறந்த தகவல் அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இந்தநிலையில் அனூப்குமார் உடல் சொந்த ஊரான குமரி மாவட்டம் மாங்காலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று அனூப்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அனூப்குமாரின் தந்தை ராணுவ வீரராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். அவருடைய சகோதரர் அஜித்குமாரும் ராணுவ வீரராக உள்ளார்.