சிக்னல் கம்பம் உடைந்து அரசு பஸ் மீது விழுந்தது

சிக்னல் கம்பம் உடைந்து அரசு பஸ் மீது விழுந்தது.

Update: 2023-05-11 21:05 GMT

பயணிகளுடன் நின்ற பஸ்

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, சத்திரம் பஸ் நிலையத்திற்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 90 பயணிகள் இருந்தனர். டி.வி.எஸ். டோல்கேட் வழியாக வந்த இந்த பஸ் மன்னார்புரம் ரவுண்டான சிக்னலில் முருகன் கோவில் அருகே நின்றது.அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அருகில் இருந்த சிக்னல் கம்பம் உடைந்து பஸ்சின் மேற்கூரை மீது விழுந்தது. இதில் பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சமடைந்து, சத்தம் போட்டனர். மேலும் பயணிகள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர். இந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் சிக்னல் கம்பம் விழுந்ததில் பஸ் நகர முடியாமல் நின்றது. இதனால் மன்னார்புரம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.மேலும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் அந்த பஸ்சில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் அரசு பஸ்சின் மேற்கூரையில் இருந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தினர்.

சிக்னல் கம்பம் அரசு பஸ் மீது விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்