முட்டம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதியது; 4 மீனவர்கள் காயம்
முட்டம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதியது. இதில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
குளச்சல்:
முட்டம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதியது. இதில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
விசைப்படகு
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பொனிப்பாஸ். இவருடைய மகன் ஆன்றனி சபில் ராஜ் (வயது 33). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது படகு கடந்த 10-ந் தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றது.
இந்த படகில் வடமாநில தொழிலாளர்கள் 6 பேரும், குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேரும் என மொத்தம் 13 பேர் இருந்தனர். படகை கலஸ்டின் (44) என்பவர் ஓட்டினார். அந்த படகு நேற்று அதிகாலை 3 மணியளவில் முட்டம் கடலில் இருந்து 34 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் இருந்தது. அதில் இருந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
கப்பல் மோதியது
அப்போது அந்த வழியாக வந்த கெமிக்கல் டேங்கர் கப்பல் ஒன்று விசை படகு அருகே நெருங்கி வந்தது. இதை பார்த்ததும் கலஸ்டின் படகை வேகமாக இயக்க முயன்றார். ஆனால் அதற்குள் கப்பல் படகின் முன்பகுதியில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மேற்கு வங்காளம் மீனவர் வினோத் புதிர் (46), வாணியக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (36), பூத்துறையை சேர்ந்த கில்பர்ட் (51) ஆகியோர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி பக்கீர் (35) என்ஜின் அறைக்குள் விழுந்தார். கடலில் விழுந்த ஆரோக்கிய ராஜ், கில்பர்ட் ஆகிய இருவரும் காயத்துடன் நீச்சலடித்து படகில் ஏறினர். வினோத் புதிர் படகில் ஏறாததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற மீனவர்கள் தூக்கி வீசப்பட்ட பகுதியில் படகில் இருந்தவர்கள் பார்த்தனர். அப்போது அங்கு வினோத் புதிர் முனகலுடன் தத்தளித்துக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு படகில் ஏற்றினர். பின்னர் மீனவர்கள் நேற்று மாலை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்துக்கு வந்தனர்.
4 பேர் காயம்
இதில் வினோத் புதிர் காலில் படுகாயம் ஏற்பட்டது. ஆரோக்கிய ராஜ், கில்பர்ட், பக்கீர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 4 பேரும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் விசைப்படகின் முன்பகுதி சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த மாதமும் கப்பல் மோதியது
குமரி கடலில் குளச்சல் விசைப்படகு மீது கடந்த மாதம் 14-ந்தேதி லைபீரியா நாட்டு எண்ணெய் கப்பல் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. குமரி கடலில் ஒரு மாதத்தில் விசைப்படகு மீது மீண்டும் கப்பல் மோதிய சம்பவத்தால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.