கழிவுநீர் கால்வாய் உடைந்தது; தொற்று நோய் பரவும் அபாயம்

குன்னூர் கார்ன்வால் ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-03-31 18:45 GMT

குன்னூர், 

குன்னூர் கார்ன்வால் ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கழிவுநீர் கால்வாய்

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் சாலை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், சில வார்டுகளில் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகார் நகராட்சி கூட்டத்திலும் எதிரொலிப்பதால், அங்கு நடைபெறும் வாதத்தால் பரபரப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் குன்னூர் கார்ன்வால் ரோடு குடியிருப்பு பகுதியில் நடைபாதையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை சீரமைக்க நகராட்சி மூலம் எச்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.

சுகாதார சீர்கேடு

ஆனால், இந்த பணியை எடுத்து மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி முழுமை பெறாமல் உள்ளது. இதன் காரணமாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. மேலும் அங்கு தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதைத்தொடர்ந்து நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் நடைபாதையும் சிதிலமடைந்து இருப்பதால், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்