ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை காணவில்லை

காட்பாடியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை காணவில்லை என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2022-11-21 16:05 GMT

காட்பாடியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை காணவில்லை என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீதா, மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சுமதி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 372 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும்

காட்பாடி அருகே காசிக்குட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ''எங்கள் ஊரில் 750-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாங்கள் செல்போன் கோபுரம் டவர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். எனவே எங்கள் ஊரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தொடர்ந்து நடத்த வேண்டும்'' என கூறியிருந்தனர்.

குடியாத்தத்தை சேர்ந்த பா.ம.க.நிர்வாகி ஒருவர் அளித்துள்ள மனுவில், ''குடியாத்தம் டவுன் கோபாலாபுரம் நேதாஜி சவுக் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அதை அகற்ற வேண்டும். பிச்சனூர்பேட்டையில் இருக்கும் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்'' என கூறியிருந்தார்.

கால்வாயை காணவில்லை

காட்பாடி அருகே கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது மெயின் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ''எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை கால்வாய் கட்டப்படவில்லை. இதனால் கழிவுநீர் வீடுகளின் முன்பு தேங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து 2019-ம் ஆண்டு கழிவுநீர் கால்வாய் கட்ட ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது. விரைவில் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாட்கள் கடந்ததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கால்வாய் குறித்த விவரங்களை பெற்றோம். அதில் எங்கள் பகுதியில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு கழிவுநீர் கால்வாய் கட்டப்படவே இல்லை. இந்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே கட்டப்பட்ட கால்வாய் காணாமல் போனதாகவே கருத வேண்டி உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் குறித்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து உலக மீன்வள தினத்தை முன்னிட்டு பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடியாத்தம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் 3 உறுப்பினர்களுக்கு தலா ரூ.29,488 மானியத்துடன் மொத்தம் ரூ.73,721 மதிப்பிலான குளிர்காப்பு பெட்டி பொருத்திய இரு சக்கர வாகனத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் நல பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் சிறந்த காப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்