கொட்டில்பாட்டில் மீண்டும் கடல் சீற்றம்

கொட்டில்பாடு பகுதியில் மீண்டும் கடல் சீற்றத்தால் கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதி மீனவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

Update: 2023-07-21 21:10 GMT

குளச்சல்:

கொட்டில்பாடு பகுதியில் மீண்டும் கடல் சீற்றத்தால் கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதி மீனவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

சாலை துண்டிப்பு

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பழைய ஆலயத்தின் அருகில் அமைக்கப்பட்டு இருந்த அலைதடுப்பு சுவர் சேதமடைந்தது.

இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. மேற்கு பகுதியில் உள்ள சாலையும் துண்டிக்கப்பட்டது. கிழக்கு பகுதியிலும் 2 இடங்களில் அலை தடுப்புச்சுவர் சேதமடைந்தது. அந்த இடத்தில் மணல் மூடைகள் போட்டு நிரப்பப்பட்டது.

கற்கள் கொட்டப்பட்டன

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பழைய ஆலயம் அருகில் மீண்டும் ராட்சத அலைகளால் மண்ணரிப்பு ஏற்பட்டு மேலும் ஒரு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், ஊருக்குள் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. அலைதடுப்பு சுவரில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து கிழக்கு, மேற்கு அலை தடுப்பு சுவர்களை இணைக்கும் வகையில் பள்ளத்தில் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு ராட்சத கற்கள் கொட்டி தற்காலிகமாக நிரப்பப்பட்டது. இதனால் பழைய ஆலயம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பு ஏற்பட்டது.

மீண்டும் கடல் சீற்றம்

இந்தநிலையில் நேற்று மதியம் முதல் கொட்டில்பாட்டில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி கரையை நோக்கி வருகிறது.

இதன்காரணமாக கிழக்கு பகுதியில் சேதமடைந்த அலை தடுப்புசுவர் வழியாக கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் வீடுகளில்...

இதனால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 10 மீனவ குடும்பத்தினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்து உள்ளனர்.

எனவே, கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளை பாதுகாக்க நிரந்தர அலை தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்