கடலூரில் காலையில் சுட்டெரித்த வெயில்; மாலையில் கொட்டிய மழை

கடலூரில் காலையில் வெயில் சுட்டெரித்தது. பின்னா் மாலையில் மழை கொட்டியது.

Update: 2023-08-12 18:45 GMT

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. சாலையில் அனல் காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அக்னி நட்சத்திரம் காலத்தில் அடிப்பது போல் வெயில் கொளுத்தியதால், பலர் புழுக்கத்தால் வீடுகளில் கூட இருக்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. மேலும் மாலை 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் காலையில் வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்த பொதுமக்கள், மாலையில் மழை பெய்து பூமியை குளிர்வித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் லக்கூர், புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்