மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை 2 மடங்காக உயர்த்த வேண்டும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தனி தாசில்தார்கள் பிரேமாவதி, ரவிச்சந்திரன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கமருல்ஜமான், பேச்சு பயிற்சி நிபுணர் கீதா தாரணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கல்வி உதவித்தொகை
ஒரு கால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம், மடக்கு சேர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும். அரசு நிதியில் கட்டப்படும் வணிக வளாகங்களில் 5 சதவீதமும், அரசுப் பணிகளில் 4 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி, அதை வரும் ஆண்டுக்குள் அமல்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 2 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு கால வரன் முறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, நிலுவையில் உள்ள உதவித்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதனிடம் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.