சரபங்கா திட்டத்தை கைவிட வேண்டும்

காவிரி டெல்டாவை பாதிக்கும் சரபங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-03 19:15 GMT

காவிரி டெல்டாவை பாதிக்கும் சரபங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சரபங்கா திட்டம்

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட மேட்டூர் அணை- சரபங்கா திட்டத்திற்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக மேச்சேரி மற்றும் நங்கவள்ளி ஆகிய 2 குழாய் வழி பாதைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி பெறாமல், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு முரணாக இத்த திட்டத்தை செயல்படுத்த முனைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆணையத்தில் புகார் மனு அளித்து உள்ளோம். இது குறித்து விவாதிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஐகோர்ட்டு வழக்கையும் காலதாமதப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது.

முதல் கட்ட பணி நிறைவு

சரபங்கா திட்டத்தில் மேச்சேரி வழியாக தண்ணீரை கொண்டு செல்வதற்கான முதல் கட்ட குழாய் வழிப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. 2-வது நீர் வழிப்பாதையை நங்கவள்ளி வழியாக கொண்டு செல்வதற்கு கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஒதுக்கீடு செய்து நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணைகளை கடந்த 27-ந் தேதி தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா பகுதிகள் பாதிக்கப்படும். விதிகளுக்கு முரணான சரபங்கா திட்டத்தை முழுமையாக கைவிட வேணடும். இதுதொடர்பான அரசாணைகளையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சங்க மாநில துணை செயலாளர் செந்தில்குமார் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்