ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Update: 2023-05-11 18:33 GMT

தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் மட்டும் தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை மேலும் காலதாமதமின்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதமின்றி உடனடியாக வெளியிட வேண்டும். வளர்ச்சித்துறையில் வட்டார, உதவி பொறியாளர்கள் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கும் உச்சவரம்பினை ரூ.5 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது முதல்-அமைச்சர் அரசு ஊழியர்களின் போராட்ட காலங்கள் வேலை நாட்களாக கருதி ஆணையிடப்படும் என்ற வாக்குறுதியை அமல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணிகள் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களில், 122 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதோடு, அங்கு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திலும் பெரும்பாலானோர் பணிக்கு வந்ததால் அங்கு பணிகள் பாதிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்