கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருசப்பன் மனைவி நதியா(வயது 28), பெரியசாமி மனைவி மீனா(26). இவர்கள் இரு குடும்பத்தினரும் ஒரே கூரை வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இவர்களது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.