சாலை துண்டிக்கப்பட்டு 7 மாதமாகியும் சீரமைக்கப்படாத அவலம்
மார்த்தாண்டம் அருகே குளத்தின் பக்கச்சுவர் இடிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டு 7 மாதமாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே குளத்தின் பக்கச்சுவர் இடிந்து விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டு 7 மாதமாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இடிந்து விழுந்த பக்கச்சுவர்
மார்த்தாண்டம் அருகே நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் பேளங்காட்டு குளம் உள்ளது. இந்த குளம் இலவுவிளையில் இருந்து பறம்பங்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அந்த பகுதி மக்களின் போக்குவரத்துக்கு இந்த சாலை முக்கியமானது.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். பள்ளி வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் சாலை வழியாக சென்று வந்தது.
இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பெய்த கனமழையில் பேளங்காட்டு குளத்தின் பக்கச்சுவர் இடிந்து குளத்துக்குள் விழுந்தது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் அவதி
இதனால் கடந்த 7 மாதமாக பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமலும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாமலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே சமயத்தில் அந்த பகுதி ஆபத்தானதாகவும் அமைந்துள்ளது.
எனவே இந்த குளத்தின் பக்கச் சுவரை கட்டி அந்த பகுதி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு இனிமேலாவது பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.