வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வால்பாறை
கள்ளக்குறிச்சி தாசில்தாரை அரசியல் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு வட்டக்கிளை தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் நாகராஜன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் அலுவலக பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டம் காரணமாக அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டது.