கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்துவருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-30 18:45 GMT

பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 9-ந் தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ்முனியன் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தனி தாசில்தார் மனோஜ்முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

இந்த போராட்டத்தை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கண்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் அலுவலக வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு பின்னர் பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து மாவட்ட தலைநகரத்திலும் மற்றும் வட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் விமல்ராஜ், வட்ட செயலாளர் விஜயன், வட்ட தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும், கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மனோஜ்முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் மீண்டும் பணி வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

பணிகள் பாதிப்பு

இதேபோல் விழுப்புரம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் சந்திர குமார் தலைமையிலும், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையிலும், செஞ்சி தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் பிரபுசங்கர் தலைமையிலும், மேல்மலையனூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் சித்தார்த்தனன் தலைமையிலும், திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் செல்வம் தலைமையிலும், வானூர் வட்ட தலைவர் சரவணன் தலைமையிலும், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் ராஜசேகர் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையிலும், மரக்காணம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் ஏழுமலை தலைமையிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் இந்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் வருவாய்த்துறை தொடர்பான ஒட்டுமொத்த பணிகளும் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்