போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து வசந்தியை நீக்கியதை ரத்து செய்ய முடியாது
ரூ.10 லட்சம் பறித்ததாக பதிவான வழக்கில் வசந்தியை இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கியதை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரூ.10 லட்சம் பறித்ததாக பதிவான வழக்கில் வசந்தியை இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கியதை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரூ.10 லட்சம் பறித்த வழக்கு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி கைதானார். பின்னர் அவர் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பணி நீக்கம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் இன்ஸ்பெக்டர் பணி வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
நான் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது கடந்த 5.7.2021 அன்று எங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குள் சிலர் கள்ளநோட்டுகளை மாற்றுவதாக தகவல் கிடைத்தது. இதுசம்பந்தமாக நடவடிக்கையில் இருந்தபோதுதான், அர்ஷத் என்பவரிடம் நான் ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
வாய்ப்பு அளிக்கவில்லை
அந்த புகாரின்பேரில் என் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்தனர். இந்த வழக்கில் எனக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நிபந்தனையின் காரணமாக என்னால் மதுரையை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால் என் மீதான வழக்கு விசாரணைக்காக விருதுநகரில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக முடியவில்லை. இருப்பினும் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கத்தை அனுப்பினேன்.
இந்தநிலையில் என்னை இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கி மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். பணி நீக்க உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக நான் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. எனவே என்னை பணி நீக்கம் செய்தது சட்டவிரோதம். அந்த உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ரத்து செய்ய முடியாது
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆஜராகியிருந்தார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் மீதான புகார்களின் அடிப்படையில் அவர் மீது 2 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, போலீஸ் உயர் அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கையை எடுத்து, மனுதாரரை பணி நீக்கம் செய்து உள்ளனர். எனவே மனுதாரரை பணி நீக்கம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.