மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 18 ஆயிரத்து 750 கன அடியாக நீடிப்பு

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.

Update: 2022-10-29 04:56 GMT

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசலில் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் 18,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்