பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாநகராட்சி வளாகத்தில் செங்கொடி சங்கம் உண்ணாவிரத போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2023-08-23 21:41 GMT

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயத்தை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில், செங்கொடி சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது, செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊதியத்தை சரிவர கொடுப்பதிவில்லை. இந்த பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று தி.மு.க. அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் கூறியது. ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டம்

இதேபோல, கடந்த 15 ஆண்டுகளாக 508 என்.எம்.ஆர். தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளார்கள். இவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். இதேபோல, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான பதவி உயர்வு வழங்க வேண்டும். இதில், தனியார்மயத்தை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகும்.

ஏற்கனவே, காத்திருப்பு, மறியல் என பல கட்டங்களாக எங்களுடைய போராட்டங்களை நடத்திவிட்டோம். எங்களுடைய கோரிக்கைகளை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உட்பட அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து வழங்கிவிட்டோம். ஆனால், இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்