கொரோனா பரவல் வேகம் 4 சதவீதமாக உயர்ந்தது

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சியில் கொரோனா பரவும் வேகம் 4 சதவீதமாக உயர்ந்தது.

Update: 2023-04-01 19:30 GMT

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சியில் கொரோனா பரவும் வேகம் 4 சதவீதமாக உயர்ந்தது.

25 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு உத்தேசமாக 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் கூடுதலாக 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் குணமடைந்துள்ளார். இவர்கள் 25 பேரும் வீட்டு தனிமையில் உள்ளனர்.

4 சதவீதமாக அதிகரிப்பு

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 13-ந்தேதி 0 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று பரவல் 14-ந்தேதி 1.4 சதவீதமாக உயர்ந்த நிலையில், நேற்று 4 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

இதனால் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்வதால், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நேற்று முதல் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் முககவசம்

அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் அனைவரும் முககவசம் அணிந்து பணியாற்றினர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கப்பட்டன. அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. மேலும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க பொது இடங்களுக்கு சென்றாலும் முககவசம் அணிந்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்