நெல்லையில் கொட்டித்தீர்த்த மழை; சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
நெல்லையில் நேற்று 1 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நெல்லையில் நேற்று 1 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
வெயிலின் தாக்கம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் 7 நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இருந்தாலும் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
பலத்த மழை
நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. 2-30 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3 மணியளவில் சாரல் மழை தூறியது. 3-45 மணிக்கு திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் 1 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது.
அப்போது மழைநீர் சாலை, தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் மார்க்கெட் பகுதி, சந்திபிள்ளையார் கோவில் பகுதி போன்ற இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மார்க்கெட்டில் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்று பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர்.
திடீர் மின்தடை
இதேபோல் நெல்லை சந்திப்பு பகுதியிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குளம்போல் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்போது வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
மழைபெய்தபோது பாளையங்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது.
மழை அளவு
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, நாங்குநேரி, பாபநாசம், மணிமுத்தாறு, மூலைக்கரைப்பட்டி, ரெட்டியார்பட்டி, பேட்டை, சுத்தமல்லி, கல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
நாங்குநேரியில் 36 மில்லி மீட்டர் மழையும், நெல்லையில் 16 மில்லி மீட்டர் மழையும், பாளையங்கோட்டையில் 7 மில்லி மீட்டர் மழையும், பாபநாசத்தில் 9 மில்லி மீட்டர் மழையும், சேரன்மாதேவியில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.