பலத்த பாதுகாப்புடன் தேனிக்கு வந்த வினாத்தாள்கள்
தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள்கள் வந்தது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட 7,301 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வு வருகிற 24-ந்தேதி நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 2 கன்டெய்னர் லாரிகளில் நேற்று கொண்டு வரப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில் கன்டெய்னர்களின் சீல் உடைக்கப்பட்டது. பின்னர் வினாத்தாள்கள் அடங்கிய பண்டல்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன. வினாத்தாள்கள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.