வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
திண்டிவனத்தில் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களிடம் அமைச்சா் செஞ்சி மஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தினார்
திண்டிவனம்
வாய்க்கால் கட்டும் பணி
திண்டிவனம்-சென்னை சாலையில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகில் உள்ள ஏரியை ரூ.40 லட்சம் செலவில் ஆழப்படுத்தும் பணி, ரூ.10 லட்சம் செலவில் நீா் வெளியேற்று வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் வாய்க்காலின் அருகே வீடுகள் இருப்பதால் மழைக்காலங்களில் வாய்க்காலில் அதிக அளவு நீர் வரத்து இருந்தால் அருகில் உள்ள வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் வாய்க்கால் கட்டும் பணிக்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தினா்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இதைப்பார்த்து அந்த வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காரில் இருந்து இறங்கி வந்து பணிகள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு விரைந்து வந்து பணிகள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பின்னர் அதிகாரிகளிடம் கலந்து பேசி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதற்காக பணிகளை நிறுத்தக்கூடாது. இடையூறாக இருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பிறகே அந்த இடத்தில் பணிகள் நடைபெறும் என உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதிய பஸ்நிலையம்
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறும்போது, திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களின் திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்த உடன் அவர் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டார். அவர் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
அப்போது திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் வசந்தகிருஷ்ணன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், அரசு ஒப்பந்ததாரர் நந்தா, நகர மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றி வேல், கவுன்சிலர்கள் சீனி ராஜ், பாபு, ஷபி, பாஸ்கர், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம் மற்றும் கதிரேசன், பிர்லா செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.