கொரோனா பரவலால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் சில்பா பிராபகர் சதிஷ், சுகாதார திட்ட இயக்குனர் உமா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் இருந்து கடந்த வாரம் வந்த சுற்றறிக்கையின் படி, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 என்ற அளவில் இருந்தது. கடந்த 9 மாதங்களாக உயிரிழப்பு இல்லை. இந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்று என்பது ஒமைக்ரானின் கூடுதல் வகைகளில் ஒன்றான எக்ஸ்.பி.பி. என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிப்பு என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், பெரிய அளவில் உயிரிழப்பும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய அவசியமும் எழவில்லை.
பரிசோதனை
தமிழகத்தில் 2½ மாதத்துக்கு முன்பு 2 என்று இருந்த தொற்றின் எண்ணிக்கை நேற்று (20-ந் தேதி) 76 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களிடம் ரேண்டமாக 2 சதவீதம் என்ற அடிப்படையில் கொரோனா பரிசோதனை எடுக்கும் போது பாதிப்பு எண்ணிக்கை 6 அல்லது 7 ஆக அதிகரித்து உள்ளது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தி வருகிறோம்.
வைரஸ் காய்ச்சல்
தமிழ்நாட்டில் எச்.3.என்.2. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. கடந்த 10-ந் தேதி 1,586 இடங்களில் காய்ச்சல் முகாமை நடத்தினோம். 476 நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் 23 ஆயிரத்து 833 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்த காய்ச்சல் முகாம்கள் மூலம் 10 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 7 ஆயிரத்து 255 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. இவர்கள் பூரண குணம் அடைந்து உள்ளார்கள். இவர்களில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, இந்த எச்.3.என்.2 வகை காய்ச்சல் முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனா அதிகரிப்பு
அதேநேரத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வாரத்திற்கு 35 ஆயிரம் பேர் வரையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருகிறோம். எக்ஸ்.பி.பி. என்ற ஒமைக்ரான் வகை பாதிப்புகள் பெரிய அளவில் எங்கேயும் தென்படவில்லை. தனிநபர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அந்த பகுதிகளை மிகத்தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எனவே, பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இதேபோல, 2 ஆயிரம் டன் ஆக்சிஜனை சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு வசதிகள் நம்மிடம் இருக்கிறது. கூடுதல் படுக்கை வசதிகளும் உள்ளது. அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
ஏற்கனவே, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களிடம் நடத்திய ஆய்வில் 90 சதவீதம் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்தது. வேறு மாநிலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டபோது கூட தமிழ்நாட்டில் கடந்த 8 மாதமாக உயிரிழப்பு ஏற்படாததற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததும் ஒரு காரணம். வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுக்க மீண்டும் ஒரு ஆய்வு நடத்தப்படும்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை நாம் முறைப்படி செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதேபோல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லி சென்றபோது நாடாளுமன்ற வளாகத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, டெல்லியில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. உடனே, அவர் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் நலமுடன் இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.