தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றப்போவதாக கூறிய பொதுமக்கள்
தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றப்போவதாக கூறிய பொதுமக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொம்யிகுப்பம் ஊராட்சிக்கு சொந்தமான இட பல வருடங்களுக்கு முன்பு பள்ளி கட்டிடம், கோவில் கட்டப்பட்டிருந்தது. தனிநபர் ஆக்கிரமிப்பும் இருந்தது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரி பகுதிக்கு செல்ல ரூ.10 லட்சம் செலவில் கழிவு நீர் கால்வாய் சுமார் 100 மீட்டர் தூரம் கட்டப்பட்டது. மீதி உள்ள இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு உள்ளதால் அதை மீட்டு அந்த இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் கட்ட ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட ஆக்கிரமிப்பு இடம் தேர்வு செய்யப்பட்டது.
எனவே அந்த பகுதியில் இடிந்து உள்ள பள்ளி கட்டிடத்தை அப்புறப்படுத்தி, தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அரசுக்கு மனு அளித்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன் ஆகியோர் அங்கு வந்தனர்.
ஆனால் ஆக்கிரமிப்பு பகுதியை அளக்க நில அளவையர்கள் வராததால் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தாங்களை பொக்கலைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து விடலாம் என கூறியதால், அவர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.