பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-03-10 18:35 GMT

திறப்பு விழா

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு துணை சுகாதார நிலையக் கட்டடத்தை திறந்து வைத்தும், நெமிலி பேரூராட்சி புன்னை கிராமத்தில் தேசிய நலவாழ்வு குழும நிதியின் கீழ் ரூ.48லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் கட்டிடத்தின் கல்வெட்டினை திறந்து வைத்து, 177 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

மக்களை தேடி மருத்துவம்

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வருமுன் காப்போம் திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் என்ற திட்டமாக மாற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு குறுகிய காலமே இருந்த நிலையில் கூட 1,250 கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்களுக்கு பதிலாக 1,260 முகாம்கள் நடத்தப்பட்டு 9.5 லட்சம் நபர்கள் பயனடைந்தனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டோர். பிசியோ தெரபி தேவைப்படுவோர், டயாலிசிஸ் தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சைகளும், மருந்துகளும் அளிக்கப்படுகிறது.

அச்சமடைய தேவையில்லை

எச்.3, என்.2 என்ற இன்புளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இதனால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி என தொடர்ந்து 3 நாட்கள் இருக்கும். இதற்காக பயப்பட தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் தொற்றுப் பரவாமல் கட்டுப்படுத்த முடியும். தும்மும்போதோ அல்லது இருமும் போதோ அதன் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும்.

வேறு எந்த மாநிலத்திலும் இதற்காக முகாம்கள் நடத்தப்படாத நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றார்கள். நோய் பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.

தமிழ்நாட்டில் கலைஞரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றார்கள். காப்பீடு அட்டை பெறாதவர்கள் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். காப்பீடு அட்டையின் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை, எழும்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் யாரேனும் நோயினால் பாதிக்கப்பட்டால் இந்த மருத்துவ காப்பீடு அட்டையின் மூலம் ரூ.22 லட்சம் வரையில் இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும்.

பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பயன்பெறவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் செல்வ விநாயகம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, நெமிலி பேரூராட்சித் தலைவர் ரேணுகா தேவி சரவணன், இயக்குனர் வடிவேலன், இணை இயக்குனர் சம்பத், வினோத் காந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி விமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்