அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

பாளையங்கோட்டையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-10 20:04 GMT

பாளையங்கோட்டையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் பஸ்

நெல்லை மாநகரப்பகுதியில் இயங்கும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றுவதில் டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்படுகிறது. இதனால் தனியார் பஸ்கள் முண்டியடுத்து வேகமாக வருகின்றன. சில பஸ்கள் தங்கள் செல்லக்கூடிய வழித்தடத்தை மீறி அனுமதிக்கப்படாத வழிதடத்தில் இயக்கப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று பாளையங்கோட்டையில் இருந்து நெல்லை சந்திப்புக்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வராமல் வேறு வழித்தடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் அதிவேகமாக வந்தது.

சிறை பிடிப்பு

பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் வந்தபோது அந்த பகுதி மக்கள் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிவேகமாக வந்த பஸ்சுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்