கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

ஆர்.பாலக்குறிச்சியில் சாலை வசதி கேட்டு கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

Update: 2023-01-26 18:21 GMT

கிராம சபை கூட்டம்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சீகம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சில வினாடிகளில் அங்கிருந்த பொதுமக்களில் சிலர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தார்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு சென்று திரும்பும் வரை வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதிகாரிகளிடம் கேள்வி

ஏற்கனவே இந்த வழித்தடத்தில் வந்த 7 பஸ்களில், இப்போது ஒரே ஒரு பஸ் மட்டுமே வந்து செல்கிறது. ஆர்.பாலக்குறிச்சியில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலை, வைரம்பட்டியில் இருந்து ஆர்.பாலக்குறிச்சிக்கு செல்லும் சாலை ஆர்.பாலக்குறிச்சி விளக்கு சாலை உள்ளிட்ட 7 கிலோ மீட்டருக்கு இன்று வரை ஏன் சாலை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் இன்று வரை அந்த தீர்மானம் நிறைவேற்ற படாமல் உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தோம். சமாதான கூட்டமும் நடைபெற்றது. அப்போது விரைவில் அப்பகுதிக்கு புதிய தார்சாலை அமைத்து தருவதாக உறுதியளித்தனர். அப்போது அவர்கள் உறுதி அளித்த சாலை பணியும் இன்று வரை நிறை வேற்றவில்லை என்று பொதுமக்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

புறக்கணிப்பு

சாலை வசதியை ஏற்படுத்தி கொடுங்கள் பின்னர் கிராம சபை கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கிராமசபை கூட்டம் நடத்தும் அலுவலர்களிடம் பொதுமக்கள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து பொதுமக்கள் சிலர் சென்றனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்