போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பா.ம.க. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 17-ந்தேதி காணும் பொங்கலை ஊர் மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆலிச்சிக்குடி மாரியம்மன் கோவில் முன்பு சாத்துக்கூடல் மேல்பாதி காலனியைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து பெண்களை கேலி செய்தனர். இதை தட்டிக்கேட்டஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரை அவர்கள் மது பாட்டிலால் தாக்கினர். பின்னர் சிறிது நேரம் கழித்து சாத்துக்கூடலை சேர்ந்த சுமார் 40 பேர் எங்கள் ஊருக்குள் புகுந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்கினர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாத்துக்கூடல் மேல்பாதி காலனியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் வந்து எங்கள் வீடுகள் மீது மரக்கட்டைகளை வீசி சேதப்படுத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அப்போது முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆசா. வெங்கடேசன், வக்கீல் சிவசங்கரன், நகர செயலாளர் முருகன், பில்லா மணி, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வி.பி.ராஜ், ஜோதி, ஒன்றிய செயலாளர் சுப சக்திவேல் உள்ளிட்ட பா.ம.க.நிர்வாகிகள் உடன் இருந்தனர்.