கொலை செய்யப்பட்ட தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கொலை செய்யப்பட்ட தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்

Update: 2022-07-04 21:40 GMT

கொலை செய்யப்பட்ட தொழிலாளி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ெபற்று கொண்டார்.

நெல்லை அருகே கரையிருப்பு பகுதியை சேர்ந்த கறிக்கடை தொழிலாளி மாயாண்டி, கடந்த 1-ந்தேதி கொலை செய்யப்பட்டார். அவரது சாவுக்கு நீதி கேட்டு, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் மாயாண்டியின் மனைவி புஷ்பம் தலைமையில், உறவினர்கள், ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயாண்டியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் அ.தி.மு.க. மகளிர் அணி தமிழ்செல்வி, பா.ஜனதா மாவட்ட தலைவர் தயா சங்கர், மாநில இளைஞரணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி, சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் சரத் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு துரை நாராயணன் உள்ளிட்டவர்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொண்டனர்.

அப்போது பா.ஜனதாவினர் தாங்கள் தான் இது குறித்து ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் பேசியதாகவும், மற்ற கட்சியினர் கொடி பிடித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் கொடிகளை அகற்றி விட்டனர்.

தொடர்ந்து மாயாண்டி மனைவி புஷ்பம், ஊர் பொதுமக்கள் 5 பேர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உள்ளிட்டோர், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், ''கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும். விதவை உதவித்தொகை வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதற்கிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாயாண்டியின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

கட்டுமான தொழிலாளர்கள்

கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாநில பொருளாளர் பேச்சியப்பன் ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அதில், ''மணல், ஜல்லி, குண்டுகல் போன்ற கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டால், நெல்லை மாவட்டத்தில் பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே கட்டுமான பொருட்கள் மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

நெல்லை உடையார்பட்டி இருதயநகர் மக்கள் நலச்சங்கத்தினர், இருதயநகர் வடக்கு புறவழிச்சாலைக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

திருவேங்கடநாதபுரம் ஊராட்சி பாடகசாலை கிராம மக்கள் தங்கள் ஊரின் அருகே தங்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நிவாரண உதவி

திசையன்விளை அருகே விஜய அச்சம்பாட்டை சேர்ந்த இசக்கிமுத்து மின்சாரம் தாக்கி இறந்தார். இதையடுத்து அவருடைய மனைவி தங்கபுஷ்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ், ஆதிதிராவிட அலுவலர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்