வாலிபரை தாக்கி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

ரூ.1½ கோடி மோசடி செய்ததாக வாலிபரை தாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Update: 2022-06-03 17:58 GMT

வேலூர்

ரூ.1½ கோடி மோசடி செய்ததாக வாலிபரை தாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ரூ.1½ கோடி மோசடி

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் புருஷோத்பாபு (வயது 35). இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. வேலூர் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இவரிடம் மாத சீட்டு, பண்டிகை சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான சீட்டு கட்டி வந்தனர். புருஷோத்பாபு பலரின் கிரெடிட் கார்டுகளை பெற்று பணம் கொடுக்கல், வாங்கல் போன்ற தொழிலும் செய்து வந்தார்.

ஒருகட்டத்தில் சீட்டு எடுத்தவர்கள் பணத்தைக் திரும்ப கேட்டனர். ஆனால் அவர் பணத்தை தராமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் திடீரென காணாமல் போனார். அவரிடம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை சீட்டு மற்றும் பல்வேறு வகைகளில் ஏமாந்த பொதுமக்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.

அவரை போலீசாரும், சீட்டு கட்டியவர்களும் தேடி வந்தனர்.

பொதுமக்கள் தாக்குதல்

இந்தநிலையில் அவர் காட்பாடி பகுதியில் சுற்றித்திரிந்ததை அறிந்த சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் அவரை பிடித்து தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்கள் கூறுகையில், பல லட்சம் மோசடி செய்த புருஷோத்பாபுவை காட்பாடியில் பிடித்தோம். அவர் திடீரென வீடுகளை சுத்தம் செய்யும் கெமிக்கலை குடித்துவிட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த பின்னர் அவரை மீண்டும் போலீசில் ஒப்படைப்போம் என்றனர். பொதுமக்களிடம் அவர் பணம் பெற்று ஏமாற்றினாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்