தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் நூதன போராட்டம்
தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் பெயர்ந்த ஜல்லி கற்களை அள்ளிச்சென்று கோவில் வாசலில் கொட்டினர்.
தார்ச்சாலை
மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் வானமுட்டி பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு கடந்த மாதம் நடந்தது.குடமுழுக்கை முன்னிட்டு ஊராட்சி சார்பில் அந்த பகுதியில் 210 மீட்டருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அவசர கதியிலும், தரமற்ற முறையிலும் சாலை அமைக்கப்பட்டதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்பட்டது.
நூதன போராட்டம்
தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ராமலிங்கம், மேகநாதன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் வானமுட்டி பெருமாளிடம் தரமற்ற சாலை அமைத்தவர்களை தண்டிக்ககோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சாலையில் பெயர்ந்து வரும் ஜல்லி கற்களை அள்ளி பைகளில் நிரப்பி தலையில் சுமந்து கொண்டு சென்று பெருமாள் கோவில் முன்பு கொட்டி தரமற்ற சாலை போட்டவர்களையும், கண்காணிக்க தவறிய அதிகாரிகளையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசின் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்தியதாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு போடப்படும் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுவதை கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.