ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் தொடரும்
ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் மீன்சுருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் ராஜாவை கடந்த மாதம் 21-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களை தூண்டி விட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியதின் விளைவாக போலீசார் 7 பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரேஷன்கடை பணியாளர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதே சமயத்தில் ஏற்கனவே எங்களது சங்கங்கள் முடிவு செய்துள்ள மற்ற 2 போராட்டங்களும் 12-ந் தேதி நடைபெறும். அதேபோல் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டையை நோக்கி பேரணி 19-ந்தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.