கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை கைவிடவேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஒரு லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-08-17 18:51 GMT

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் காய்-கனி மார்க்கெட்டை முழுமையாகவோ, பகுதியாகவோ திருமழிசைக்கு மாற்றி விட்டு, மார்க்கெட்டை வணிகமையமாக மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தீர்மானித்திருக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவது ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிடும்.

ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த மார்க்கெட்டில் 27 ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரத்துக்கும் கூடுதலான கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள பகுதிகள் வாகனங்கள் நிறுத்தம், கிடங்குகள் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு வசதிக்குறைவுகள் இருந்தாலும், சென்னை மாநகர மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருகிறது.

காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல

சிறப்பு மிக்க கோயம்பேடு மார்க்கெட்டை பகுதியாகவோ, முழுமையாகவோ திருமழிசைக்கு மாற்றுவதற்கு திட்டம் வகுத்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ), அந்த இடத்தில் மிகப்பெரிய வணிக மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து வழங்குவதற்காக 'குஷ்மன் அன்ட் வேக்பீல்ட்' என்ற பன்னாட்டு நிலவணிக நிறுவனத்தை அமர்த்தியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோயம்பேடு மார்க்கெட்டை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.11 கோடியே 70 லட்சம் செலவு ஆகுவதாகவும், அதிலிருந்து ரூ.12 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள சி.எம்.டி.ஏ அதிகாரிகள், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே லாபம் கிடைக்கும் இந்த மார்க்கெட்டை நிர்வகிக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த பார்வை மிகவும் தவறானது.

கைவிட வேண்டும்

கோயம்பேடு மார்க்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை பார்க்கக்கூடாது; மாறாக, சென்னை மாநகர மக்களுக்கு குறைந்த விலையில் காய்-கனிகள் கிடைக்கவும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கவும் கோயம்பேடு மார்க்கெட் காரணமாக இருக்கிறது. அதைத்தான் அரசு பார்க்க வேண்டும். கோயம்பேடு சந்தை என்பது அரசை பொறுத்தவரை வணிகம் அல்ல. சேவை என்பதை சி.எம்.டி.ஏ. உணர வேண்டும்.

எனவே, வணிகர்கள், தொழிலாளர்கள், சென்னை மாநகர மக்கள் ஆகியோரின் நலனை கருத்தில்கொண்டு கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சி.எம்.டி.ஏ. கைவிட வேண்டும். வணிக மையம் அமைக்கும் திட்டத்தை சென்னையின் வேறு பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்