93 பயனாளிகளுக்கு ரூ.8½ கோடியில் கடன்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
93 பயனாளிகளுக்கு ரூ.8½ கோடியில் கடன்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் நேற்று மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக பல்வேறு கிளைகள் மூலம் 93 நபர்களுக்கு ரூ.8 கோடியை 53 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் கடன், பிரதமர் வேலை வாய்ப்பு கடன், தாட்கோ சுயதொழில் கடன், நடைபாதை வியாபாரிகளுக்கான கடன், புதிய தொழில் முனைவோருக்கான கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் பெறுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் விஜயராணி, தாட்கோ மாவட்ட மேலாளர் இந்திரா, மாவட்டமுன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் விவேக் மற்றும் வங்கி கிளை மேலாளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.