குமரியில் சிவாலய ஓட்டம் ெதாடங்கியது

குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் ‘கோபாலா... கோவிந்தா...’ பக்தி கோஷத்துடன் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-17 18:45 GMT

புதுக்கடை, 

குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் 'கோபாலா... கோவிந்தா...' பக்தி கோஷத்துடன் கலந்து கொண்டனர்.

சிவாலய ஓட்டம்

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் சிவராத்திரியையொட்டி 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன.

சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவபெருமானிடம் வரம் பெற்று பின்னர், அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் 'கோபாலா... கோவிந்தா...' என்று அழைத்தவாறு ஓடியதாகவும், இறுதியில் விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து சூண்டோதரனை அழித்ததாகவும் சொல்லப்படுகிறது.

12 திருத்தலங்கள்

இதுதவிர திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தல புராணம் சிவாலய ஓட்டத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அரக்கனான கேசனை மகாவிஷ்ணு ஆதிசேடனால் சுற்றி வளைத்து வீழ்த்திய போது கேசன் தனது நெடிய 12 கைகளினால் மனித உயிர்களை வதம் செய்ய முயற்சித்தான். அப்போது அதனைத் தடுக்கும் வகையில் சிவ பக்தனான கேசனின் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைக் கொடுத்தாகவும், அதனால் கேசன் அடங்கியதாகவும் கூறப்படுகிறது.

புராணத்தின் படியே திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை மையமாகக் கொண்டு 12 சிவாலயத் திருத்தலங்களும் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

ஓட்டம் தொடங்கியது

ஆண்டுதோறும் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் 12 கோவில்களுக்கும் சிவாலய ஓட்டமாக ஓடுகின்றனர். அதன்படி சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்பு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்கள் காலை, மாலை இரண்டு நேரமும் புனித நீராடி சிவாலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இந்த விரத நாட்களில் சைவ உணவே சாப்பிட்டனர்.

சிவாலய ஓட்டம் நேற்று முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. பக்தர்கள் முதலில் கோவிலில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி காவி உடை அணிந்து, கையில் விசிறி, விபூதி பூசி மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து 'கோபாலா... கோவிந்தா...' என்ற பக்தி கோஷத்துடன் ஓட்டத்தை தொடங்கினர். நேற்று காலையில் ஒருசிலர் ஓட தொடங்கினர். பிற்பகல் முதல் ஆண்கள், பெண்கள் என பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

108 கிேலா மீட்டர்

முன்சிறையில் ஓட்டத்தை தொடங்கிய பக்தர்கள் காப்புக்காடு, சென்னித்தோட்டம், மார்த்தாண்டம் வழியாக 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 3-வது சிவாலயமான திற்பரப்பு வீரபத்திரர் கோவிைல நோக்கி ஓடத்தொடங்கினர்.

தொடர்ந்து திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சாமிகோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் வழியாக இன்று (சனிக்கிழமை) நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைகிறார்கள். இந்த ஓட்டத்தின் போது பக்தர்கள் 108 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருகிறார்கள்.

இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூர் விடுமுறை

சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர், மோர், சுக்குநீர், கஞ்சி, பழம் ேபான்ற உணவு பொருட்கள் வழங்கினர்.

12 சிவாலயங்களையும் தரிசனம் செய்ய இன்று (சனிக்கிழமை) ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன் போன்ற வாகனங்களில் வருவார்கள். இவர்கள் ஒரே நாளில் 12 சிவாலயங்களுக்கும் ெசன்று சாமி தரிசனம் செய்வார்கள். இதைெயாட்டி 12 சிவாலயங்களும் விழா கோலம் பூண்டுள்ளன. மேலும், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவராத்திரியைெயாட்டி குமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்