பள்ளி சுவரில் மின்கசிவு ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

பள்ளி சுவரில் மின்கசிவு ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஊட்டி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-07-29 13:59 GMT

ஊட்டி

பள்ளி சுவரில் மின்கசிவு ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஊட்டி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

ஊட்டி நகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டம் தொடங்கியதும் அஜெண்டா தீர்மான நகல் கூட்டத்திற்கு ஒரு நாளைக்கு முன்பாகவோ அல்லது கூட்டம் நடைபெறும் போேதா கொடுக்கப்படுகிறது, இதை ஒரு வாரத்திற்கு முன் கொடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து தீர்மான நகலை 5 நாட்களுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் காந்திராஜன் தெரிவித்தார். அதன்பின்னர் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

காந்தல் பகுதியில் பொது கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கால்வாயை தூர்வார வேண்டும். மார்லிமந்து அணை தண்ணீர் மாசுபட்டு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். நாசரேத் காலனி சாலையை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழை பெய்யும்போது தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. அதை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்‌. அதை சரி செய்ய வேண்டும்.

பள்ளி கட்டிடத்தில் மின்கசிவு

36-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் குழாய்கள் பதித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் குழாய்கள் துருப்பிடித்து உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும். 32-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தனியார் நிலத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். மேலும் அந்த வார்டில் சமுதாய கூடத்திற்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். கோழிப்பண்ணை மார்லிமந்து பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. அங்கு இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெருவிளக்கு ஒளிருவது இல்லை.

32, 33, 34 மற்றும் 36 என 4 வார்டுகளுக்கும் பொதுவாக உள்ள தலையாட்டுமந்து சுடுகாட்டை சீரமைக்க வேண்டும். பழைய ஊட்டி ஆரம்பப்பள்ளி கட்டிட சுவற்றில் மின் கசிவு ஏற்படுகிறது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்து பேசிய ஆணையாளர் காந்திராஜன் கூறும்போது, அடுத்த மாதம் நடக்க உள்ள நகராட்சி கூட்டத்திற்கு மின்விளக்கு பணிகளுக்கான ஒப்பந்ததாரர் நேரில் வரவழைக்கப்படுவார். தெருவிளக்கு பிரச்சினை அதிகளவில் இருப்பதால் 6 மாதமாக அவருக்கான தொகை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மற்ற கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்கி, பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

கருப்பு சட்டை

முன்னதாக கவுன்சிலர் ராஜேஸ்வரி கூறும்போது, மரவியல் பூங்கா முன்பு உள்ள பொதுக்கழிப்பறைக்கு அருகில் செல்லும் பாதையை மறைத்து தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டால் அமைச்சரின் உறவினர் என்று கூறி ஒருவர் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில், கூட்டத்துக்கு 6 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்