தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் செல்வதாக கூறி தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் செல்வதாக கூறி தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் அவதி
கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளதால், கிணத்துக்கடவு ஊருக்குள் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் சில அரசு மற்றும் தனியார் பஸ்களை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வருகின்றன. ஆனால், காலை 10 மணிக்கு மேல் சில பஸ்கள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து வரும்போது கிணத்துக்கடவுக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்று விடுகின்றன.
அதேபோல் பொள்ளாச்சியில் இருந்து கோவில்பாளையம் வழியாக கிணத்துக்கடவு வரும் பஸ்களும் கோவில்பாளையம் சர்வீஸ் சாலையில் வருவதில்லை.
இதனால் கோவை, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, கோவில்பாளையம் வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலையில் கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி சென்ற தனியார் பஸ்சை கிணத்துக்கடவு பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
டிரைவரிடம் வாக்குவாதம்
தொடர்ந்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், கோவை, பொள்ளாச்சி பகுதியில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கிணத்துக்கடவு வரும் மக்களை பஸ்சில் ஏற்றுகிறீர்கள். ஆனால், காலை 10 மணிக்கு மேல் கிணத்துக்கடவு ஊருக்கு டிக்கெட் கேட்டால் கிணத்துக்கடவு ஊருக்குள் பஸ் செல்லாது. மேம்பாலத்தில் சென்று விடும் என்று கூறுகிறீர்கள் இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினர். அதற்கு டிரைவர் கூறும்போது, கோவையில் இருந்து பொள்ளாச்சி புறப்படும் போது சுற்றி வருவதால் நேரம் போதாத காரணத்தினால் மேம்பாலத்தில் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது என்றார்.
ஆனாலும், பொதுமக்கள் இனிமேல் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.