எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

75-வது சுதந்திரதின விழாவையொட்டி சென்னை, எழும்பூர், அருங்காட்சியகத்தில் காந்தியின் உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Update: 2022-08-14 19:10 GMT

சென்னை,

காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களை போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75-வது சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவை சிறப்பிக்கின்ற வகையிலும் காந்தியடிகளின் உருவச்சிலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.

தென்னாப்பிரிக்கா மக்களின் உரிமைக்காக போராடிய காந்தியடிகள், இந்தியா திரும்பியவுடன் ஆங்கிலேயர்களின் ஆதிக்க சக்திக்கு அடிமைப்பட்டு இருப்பதை பார்த்து, இந்திய நாட்டிற்கு விடுதலை பெற்று தர வேண்டும் என்று உறுதி பூண்டார்.

ஆயுதம் ஏந்தி போராடுவதைவிட, அறவழியாம் அகிம்சை வழியில் சாதிக்க முடியும் என்று உலகில் உள்ள அனைவருக் கும் உணர்த்தி காட்டியவர் காந்தியடிகள்.

காந்தி மண்டபம்

1896 முதல் 1946-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு 12 முறை வந்துள்ளார். மதுரை மாநகருக்கு 1921 செப்டம்பர் 22-ந் தேதி வந்தபோது மக்கள் உடுக்க போதிய உடை இன்றி துன்பமடைவதை கண்டு வேதனை அடைந்தார். தன்னுடைய வழக்கமான உடையை துறந்து, விவசாயிகள் அணியும் வேட்டி, துண்டுக்கு தன்னை மாற்றிக்கொண்டதோடு, மேலாடை அணிவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்த்தார்.

1949-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டு அதன் நினைவாக அமைக்கப்பட்ட காந்தி மண்டபம் 30.5.1956 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

அவருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் காந்தி மண்டப வளாகம் 27.1.1956 அன்றும், இவ்வளாகத்தில் காந்தியடிகளின் அருங்காட்சியகம் 2.10.1979 அன்றும் திறந்து வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தியின் உருவ சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்