பிரதமர் வீடு வழங்கும் திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ள வீடுகள் கட்டும் பணிகளை உடனடியாக தொடங்க கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் காலதாமதங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
விரைவாக முடிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கான புதிய கழிப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதை உடனடியாக தொடங்கிட வேண்டும். அதேபோன்று அனுமதி அளிக்கப்பட்டு தொடங்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மைய பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். பழுது நீக்கம் பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடம் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்தும் பயன்பாட்டில் இருக்குமாறு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
வீடுகட்டும் பணி
பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 1,019 வீடுகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனடியாக இப்பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்காடு, நெமிலி வட்டாரங்களில் இப்பணிகளில் அதிக தொய்வு இருக்கிறது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதன் மீது கவனம் செலுத்திட வேண்டும்.
வருவாய்த்துறை மூலம் சுமார் 1,000 வீடுகளுக்கு பட்டா வழங்காமல் உள்ளது. விரைவாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை பணியாளர்களின் பணியை அதிகரிக்க வேண்டும். ஆதார் அட்டை இணைப்பு பணியை உடனடியாக முடிக்க வேண்டும். ஆதார் இணைப்பு இல்லாததால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் சரியான நேரத்தில் கிடைக்காமல் நிறுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவம் உணர்ந்து முறையாக பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, குடிநீர், அடிப்படை மேம்பாட்டு பணிகளில் நிலுவையாக உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் முத்துசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறியாளர்கள், ஒன்றிய செயற் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் கலந்துகொண்டனர்.