அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் அரிவாள் மீது பூசாரி ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

Update: 2022-06-09 14:57 GMT

கோவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அடைக்கனூர் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வைகாசி மாத திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் விழாவில், அம்மன் கரகம் பாலித்து கொண்டு வந்து கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

விழாவின் 2-வது நாளான நேற்று, மூலவருக்கு கோவில் பூசாரி அம்மையப்பன் சிறப்பு பூஜை செய்தார். அப்போது தப்பாட்டம் வாசிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தப்பாட்ட ஓசைக்கு ஏற்றவாறு பூசாரி நடனமாடியபடி கோவில் முன்பகுதிக்கு வந்தார். உடனே அங்கு இருந்த பக்தர்கள் சுமார் 4 அடி நீளமுள்ள 2 அரிவாள்களை எடுத்து வந்தனர்.

அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு

அந்த அரிவாள்களை பக்தர்கள் இருபுறமும் பிடித்துக்கொண்டனர். பூசாரி அம்மையப்பன் அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்பு ஆணிகள் அடிக்கப்பட்டு இருந்த செருப்பை பூசாரி அணிந்து கொண்டும் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்த மர நாற்காலியில் அமர்ந்தும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அவர்களுக்கு திருநீறும், எலுமிச்சை பழமும் பிரசாதமாக பூசாரி வழங்கினார்.

பின்னர் மாலையில் கோவிலில் இருந்து அம்மன் கரகம் ஊர்வலமாக எடுத்து சென்று குடகனாற்றில் கரைக்கப்பட்டது. விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்