கொய்யாப்பழம் விலை கிடு,கிடு உயர்வு
ஆயக்குடி சந்தைக்கு வரத்து குறைவால் கொய்யாப்பழம் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது.
கொய்யா சந்தை
பழனியை அடுத்த ஆயக்குடி, அமரபூண்டி, சட்டப்பாறை, கோம்பைபட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யாப்பழம் விவசாயம் நடைபெறுகிறது. பனாரஸ், லக்னோ உள்ளிட்ட ரகங்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள தோட்டங்களில் பறிக்கப்படும் கொய்யாப்பழங்களை தரம் பிரித்து ஆயக்குடி சந்தையில் வைத்து விவசாயிகள் நேரடியாக விற்கின்றனர்.
ஆயக்குடி சந்தைக்கு பழனி, திண்டுக்கல் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் வந்து கொய்யாப்பழத்தை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக கேரள வியாபாரிகள் கொய்யாப்பழத்தை அதிகமாக கொள்முதல் செய்து செல்கின்றனர். பழனி பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்தில் கொய்யாப்பழம் சீசன் தொடங்கும். 3 மாதங்கள் வரையுள்ள சீசன் காலத்தில் தினமும் சுமார் 60 டன் வரை கொய்யாப்பழம் வரத்து ஆகும்.
கிடு,கிடு உயர்வு
அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கியது. சீசன் காலத்தில் தினமும் சுமார் 30 டன் வரை கொய்யாப்பழம் வரத்தானது. அதைத்தொடர்ந்து வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் 22 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் ஆயக்குடி சந்தைக்கு கொய்யாப்பழம் வரத்து குறைந்து வருகிறது. இதனால் கொய்யாப்பழ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது 22 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.1,600 வரை விற்பனை ஆனது.
இந்த விலை உயர்வு குறித்து விவசாயிகள் கூறும்போது, சந்தைக்கு தினமும் சுமார் 5 டன் மட்டுமே கொய்யாப்பழம் வரத்து உள்ளது. இதனால் கொய்யாப்பழ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு பெட்டி ரூ.600 வரை விற்பனை ஆன நிலையில் நேற்று ரூ.1,000 முதல் 1,600 வரை விற்பனையாகியது. வரும் நாட்களில் இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது, என்றனர்.