பொத்தமரத்து ஊருணியை முழுமையாக தூர்வார வேண்டும்
பொத்தமரத்து ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு தூர்வார வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
சிவகாசி,
பொத்தமரத்து ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு தூர்வார வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாநகராட்சி கூட்டம்
சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார். துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். கமிஷனர் சங்கரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தீர்மானங்கள் மீது விவாதம் செய்தனர். அதன் விபரம் வருமாறு:-
தங்கபாண்டிசெல்வி:- பொத்தமரத்து ஊருணி அருகில் உள்ள கட்டிடங்களை அகற்றும் போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய முன்எச்சரிக்கை தபால் வழங்காதது ஏன்?
மீட்டு எடுக்க வேண்டும்
ஞானசேகரன்: பொத்தமரத்து ஊருணியின் பரப்பளவு 5 ஏக்கர் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது 3 ஏக்கர் பரப்பளவுக்கு மட்டும் தூர்வாரப்படுகிறது. அந்த ஊருணியின் நடுவில் உள்ள ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்ற வேண்டும். இதுகுறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து ஊருணியை முழுமையாக மீட்டு எடுக்க வேண்டும்.
கரைமுருகன்: சிவகாசி பகுதியில் காரனேசன், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். அதேபோல் அம்மா உணவகத்தை மேயர் ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பாக்கியலட்சுமி: நான் கவுன்சிலராக பதவி ஏற்று 1 ஆண்டு முடிந்து விட்டது. இதுவரை எனது வார்டில் ரூ.2 லட்சம் செலவில் மட்டுமே வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. எனது வார்டில் பல தேவைகள் உள்ளது. இதுகுறித்து பல முறை எடுத்து கூறியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். வளர்ச்சி பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இதே போல் மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் ஜெயராணி, குமரி பாஸ்கரன், மகேஸ்வரி, ரவிசங்கர், ரஞ்சித்ராஜா, வெயில்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.