பெண்ணின் உடலை 1½ கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வந்த போலீஸ்காரர்
குரும்பூர் அருகே இறந்த பெண்ணின் உடலை 1½ கிலோ மீட்டர் தூரம் போலீஸ்காரர் தோளில் சுமந்து வந்தார்.
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே இறந்த பெண்ணின் உடலை 1½ கிலோ மீட்டர் தூரம் போலீஸ்காரர் தோளில் சுமந்து வந்தார்.
வயலுக்கு சென்ற பெண்
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் நாகக்கன்னியாபுரம் வயல் பகுதிக்கு சென்ற போது, மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார்.
தோளில் சுமந்த போலீஸ்காரர்
இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
வயல் பகுதியாக இருந்ததால் வாகனத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ்காரர் காளிமுத்து என்பவர் தனது தோளில் அம்மாள் தங்கத்தை தூக்கி வைத்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சுமந்து வெளியே கொண்டு வந்தார். போலீஸ்காரரின் மனிதநேயத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.