'ஆர்டர்லிகளை' வைத்திருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
‘ஆர்டர்லிகளை’ வைத்திருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை,
போலீஸ் துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் போலீஸ் குடியிருப்பில் இருந்து தன்னை வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அவரை வெளியேற்ற கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில்தான் குடியிருப்பை மாணிக்கவேல் காலி செய்தார் என்று நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, 'போலீஸ் துறை மீது ஏராளமாக புகார்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக ஜீரணிக்க முடியாத குற்றச்சாட்டுகள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது அரசும் நடவடிக்கை எடுப்பது இல்லை' என்று கருத்து கூறினார். 'ஆர்டர்லி' முறைக்கும் கண்டனம் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் ஆலோசனை
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, 'ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டி.ஜி.பி.க்கு உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சரும் ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளார். அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியதாவது:-
வழக்குப்பதிவு
போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற கனவோடு முறையாக பயிற்சி முடித்து மாதம் ரூ.45 ஆயிரம் ஊதியம் பெறும் போலீஸ்காரர்களை உயர் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட வீட்டு வேலைகளை செய்வதற்காக 'ஆர்டர்லிகளாக' பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். உயர் அதிகாரிகள் தங்களது வீட்டு வேலைக்கு தனிப்பட்ட முறையில் உதவியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். 'ஆர்டர்லிகளை' வைத்துக்கொள்ளும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள 'ஆர்டர்லிகளை' உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.