விவசாயி வீட்டில் கொள்ளை:வாலிபரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்புசாமிபெருமாள் மகன் மாணிக்கவாசகம் (வயது 45). விவசாயி.
கடந்த 4-ந்தேதி மதியம் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
அதில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தினகரன் (35) என்பவர் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் விரைந்த நிலையில், மற்றொரு திருட்டு வழக்கில் தினகரனை தர்மபுரி மாவட்டம் அரூர் போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, மணலூர்பேட்டை போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று, நேற்று முதல் தினகரனை காவலில் எடுத்து வந்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்தும், திருக்கோவிலூர் பகுதியில் நடந்த வேறு எந்த திருட்டு வழக்கிலாவது தினகரனுக்கு தொடர்பு உள்ளதா? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.