போலீஸ் நிலையத்தை நரிக்குறவர்கள் முற்றுகை

சாமி உருவங்கள் பதிக்கப்பட்ட வெள்ளித்தகடுகளுக்கு உரிமை கேட்டு மயிலாடுதுறையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-16 18:45 GMT

சாமி உருவங்கள் பதிக்கப்பட்ட வெள்ளித்தகடுகளுக்கு உரிமை கேட்டு மயிலாடுதுறையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளித்தகடுகள்

மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை பகுதியில் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். வெள்ளி தகட்டில் உருவங்கள் பதிக்கப்பட்ட காளியம்மன் உட்பட 12 சாமிகளை ஆனந்தன் குடும்பத்தினர் பல தலைமுறைகளை தங்கள் குலதெய்வமாக வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

கடந்த ஐப்பசி உற்சவத்தின் போது அந்த வெள்ளி தகட்டிலான சாமி உருவங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திவிட்டு ஆனந்தன் வீட்டில் வைத்துள்ளார்.

போலீஸ் நிலையம் முற்றுகை

அன்றைய தினமே வெள்ளித்தகடுகள் திருட்டுபோய் உள்ளது. இது குறித்து ஆனந்தன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த நரிக்குறவர்களிடம் இருந்து மயிலாடுதுறை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளித்தகடுகளை மீட்டனர்.

இதனை அறிந்து நேற்று முன்தினம் விழுப்புரம், மதுரை, புதுச்சேரி, கடலூர், சேலம் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது கைப்பற்றிய வெள்ளித் தகடுகள் எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமானது, அனைவருக்கும் பொதுவானது அதனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை

இதனை அறிந்த ஆனந்தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்கள் குடும்பச்சொத்து பல தலைமுறைகளாக நாங்கள் வைத்து வழிபாடு நடத்தி வருகிறோம். எங்களிடமிருந்து திருடிச் சென்றுவிட்டு தற்போது பொதுசொத்து என்று கூறுகின்றனர் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனந்தன் தரப்பிற்கு ஆதரவாக பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் அக்கட்சியினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

வஜ்ரா வாகனம் நிறுத்தி வைப்பு

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஒப்படைப்பது அல்லது கோர்ட்டை நாடி முடிவெடுத்துக்கொள்வது என்றும், அதுவரை வெள்ளித் தகடுகள் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் என்றும் கூறி இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் பகுதியில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

முன்னதாக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்